பாடசாலையில் அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள்
பாடசாலையில் அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் 22.06.2018 ஆம் திகதியுடைய இலக்கம் 26/2018 கொண்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டல் கைநூலின் வாசக இலக்கம் 7.3 மற்றும் 13.1 - 13.5 இற்கு அமைவாகப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
அன்பளிப்பாகப் பொருட்கள் கிடைக்கப் பெறும் போது பாடசாலை தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் அப் பொருட்கள் பொருத்தமானது எனப் பரிந்துரை செய்யப்பட்ட பின்னரே அப் பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
யாதாயினும் நிதி / பொருளுதவி அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்வதற்காக அது தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெயரில் முறைசார் தொடரிலக்கத்துடன் கூடிய பற்றுச்சீட்டினை வழங்குதல் வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் மூலம் அவ் அச்சிட்ட தொடரிலக்கமிடப்பட்ட பற்றுச்சீட்டினை அச்சிட்டு அச் சகல பற்றுச்சீட்டிலும் வலயக் கல்விப் பணிப்பாளரது உத்தியோக பூர்வ முத்திரை இடப்படல் வேண்டும்.
நிதி உதவிக்காக அபிவிருத்திக் கணக்கு பற்றுச்சீட்டு (மேற்படி கைநூலில் உள்ள இணைப்பு 1) மற்றும் பொருள் ரீதியான உதவிக்காக அன்பளிப்புக்காகப் பெறப்படும் பொருள் உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் பற்றுச்சீட்டு (மேற்படி கைநூலில் உள்ள இணைப்பு 12) பயன்படுத்தப்படல் வேண்டும். பற்றுச்சீட்டை வழங்குவதன் மூலம் மட்டுமே நிதி ரீதியான / பொருள் ரீதியான அன்பளிப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளப்படும் நுகர்வுப் பொருட்களை பொது 198 - இருப்புப் புத்தகத்திலும் (Stock Book) நுகர்வு அல்லாத பொருட்களை (மூலதனப் பொருட்களை) பொது 44 – பொருட்பதிவுப் புத்தகத்திலும் (Inventory Book) பதிவு செய்தல் வேண்டும்.
அன்பளிப்பாகப் பெறப்படும் மூலதனப் பொருட்கள் தொடர்பான அறிக்கையை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
பெற்றுக் கொள்ளப்படும் பொருட்கள், சொத்துக்களை உரிய முறையில் பயன்படுத்துதல் அதிபரின் பொறுப்பாகும்.